17 Mar
  • By OfERR 1 web
  • Cause in

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்

ஆஸ்திரேலியாவில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்ட 25 அகதிகள்

கொழும்பு:


ஆஸ்திரேலியாவிலிருந்து இலங்கைக்கு நாடுகடத்தப்பட்ட 25 இலங்கை அகதிகள் இன்று காலை கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு சென்றடைந்துள்ளனர். நான்கு பெண்கள் உள்பட 25 அகதிகள் இலங்கை குற்ற விசாரணைப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மலேசியாவிற்கு சென்று அங்கிருந்து ஆஸ்திரேலியாவில் புகலிடம் பெற முயற்சித்ததாக கூறப்படுகின்றது. அண்மையில் ஆஸ்திரேலியா சென்ற இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தஞ்சக் கோரிக்கை மறுக்கப்பட்ட இலங்கை அகதிகள் பயமின்றி நாடு திரும்பலாம் எனத் தெரிவித்தார்.

ஆஸ்திரேலியாவில் இருந்து


அதன் பின்னர், முதல் முறையாக இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவிலிருந்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். ஆஸ்திரேலியாவின் குடிவரவுத்துறை ஜனவரி 2017 கணக்குகள்படி, 86 இலங்கை அகதிகள் ஆஸ்திரேலியாவின் தடுப்பு முகாம்களில் உள்ளனர்.

எல்லை பாதுகாப்பு

2012க்கு பின்னர் கடுமையான எல்லைக் கட்டுப்பாடுகளை நடைமுறைப்படுத்தி வரும் ஆஸ்திரேலியா, கடல் வழியாக வரும் அகதிகளை அந்நாட்டிற்கே தொடர்ந்து திருப்பியனுப்பி வருகிறது. அப்படி கடந்தாண்டு 12 அகதிகளோடு வந்த ஒரு இலங்கை படகு திருப்பி அனுப்பப்பட்டது.

தடுப்பு முகாம் மூடல்

2014ல் 153 தமிழ் அகதிகளோடு வந்த படகும் அப்போது திருப்பி அனுப்பப்பட்டது. வரும் அக்டோபர் மாதத்திற்குள் மனுஸ்தீவில் உள்ள அகதிகள் தடுப்பு முகாமை ஆஸ்திரேலியா மூடுவதற்கு தீர்மானித்துள்ள நிலையில், மேலும் பல்வேறு நாட்டைச் சேர்ந்த அகதிகள் நாடு கடத்தப்படக்கூடும் என சொல்லப்படுகின்றது.

நல்வாழ்வு


உள்நாட்டு போர் காரணமாக அகதிகளாக ஆஸ்திரேலியா சென்ற அகதிகள் மேலும் பலர் இலங்கைக் திரும்பக் கூடும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. இலங்கை வந்த பின்னர் அவர்கள் மீண்டும் வழமையான வாழ்க்கைத் தொடர, பாகுபாடு காட்டாமல் இலங்கை அரசு செயல்பட வேண்டும் என்று தமிழ் மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.